163. அருள்மிகு சாட்சிநாதர் கோயில்
இறைவன் சாட்சிநாதர்
இறைவி சௌந்தர்யநாயகி
தீர்த்தம் சந்தர புஷ்கரணி
தல விருட்சம் பாதிரி
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருஅவளிவநல்லூர், தமிழ்நாடு
வழிகாட்டி தஞ்சாவூர் - நாகப்பட்டினம் நெடுங்சாலையில் 21 கி.மீ. தொலைவில் உள்ள அம்மாபேட்டை வந்து இடதுபுறம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம். அம்மாபேட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ.
தலச்சிறப்பு

Tiruavalivanallur Gopuramகோயில் குருக்கள் ஒருவரின் மூத்த மகளை மணந்த ஒருவன் யாத்திரை முடிந்த திரும்பி வந்தபோது தனது மனைவியின் கண் பார்வை போயிருப்பதைக் கண்டு, தான் அவளை மணக்கவில்லை என்றும், கண் பார்வை உள்ள அவளது தங்கையைத்தான் மணந்ததாகவும் கூறினான். அப்போது இறைவன் அசரீரியாக வெளிப்பட்டு, 'நீ திருமணம் செய்தவள் இவள் இல்லை, அவளே' என்று கூறி அவளது கண்பார்வையையும் திருப்பி அளித்தார். அன்று முதல் இத்தலம் 'அவளிவநல்லூர்' என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் 'சாட்சிநாதர்' என்னும் திருநாமத்துடன், சற்று உயர்ந்த பாணத்துடன், சற்று பெரிய வடிவிலான லிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். மூலவர் பின்புறம் அம்மையப்பர் காட்சி தருகின்றார். அம்பாள் 'சௌந்தர்ய நாயகி' என்னும் திருநாமத்துடன் பெரிய வடிவில் காட்சி அளிக்கின்றார்.

கோஷ்டத்தில் அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் சப்த கன்னியர், அறுபத்து மூவர், விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், மகாலட்சுமி, சமயக் குரவர்கள் நால்வர், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் மற்றும் நடராஜர் சன்னதிகள் உள்ளன. வலம்புரி மற்றும் இடம்புரி விநாயகர்கள் ஒருங்கே காட்சி தருகின்றனர்.

காவிரிக் கரையில் உள்ள பஞ்ச ஆரண்யத் (ஆரண்யம் - வனம்) தலங்களுள் இத்தலமும் ஒன்று. கருகாவூர் - முல்லை வனம், அவளிவநல்லூர் - பாதிரி வனம், அருதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) - வன்னி வனம், இரும்பூளை (ஆலங்குடி) - பூளை வனம், கொள்ளம்புதூர் - வில்வ வனம். இந்த ஐந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்தசாமம் ஆகிய காலங்களில் வழிபடுவது சிறப்பு. இவை இன்றும் வழக்கத்தில் உள்ளன.

பன்றி வடிவம் எடுத்து நிலத்தை தோண்டிய மகாவிஷ்ணு, தனது கொம்பு முறியப்பட்டு வழிபட்ட தலம். முருகப் பெருமான், அகத்தியர், காசிப முனிவர், கன்வ மகரிஷி, சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com